"கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா கூட இழப்பீடு ரூ.10 லட்சம் கிடைக்கும்.. ஆனா விவசாயிகளுக்கு அது கூட இல்லை... இது தமிழ்நாடு அரசோட நிர்வாக சீர்கேடு" - பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் கொதித்தெழுந்த விவசாயிகள்!



கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயரிட்டருந்த விளைநிலங்களில் மழை நீர் தேங்கி விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் என பல கட்ட போராட்டங்களை நடத்தியும் தற்போது வரை விவசாயிகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில், நாளை மறுதினம் (14.11.2024) அன்று தூத்துக்குடிக்கு ஆய்வு பணிகள் மேற்கொள்ள வருகை வரவிருக்கும் தமிழக துணை முதல்வர் உதயநிதியின் வருகையை ஒட்டி விவசாயிகள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவிக்கப்போவதாக வாட்ஸ் அப், பேஸ் புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவசாயிகள் பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து உடனடியாக இன்று (12.11.2024) மாலை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் காவல் துறையினர் மற்றும் காப்பீடு நிறுவன அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகள், "கள்ளச்சாராயம் குடிச்சு செத்தா கூட இழப்பீடு ரூ.10 லட்சம் கிடைக்கும்.. ஆனா விவசாயிகளுக்கு அது கூட இல்லை... இது தமிழ்நாடு அரசோட நிர்வாக சீர்கேடாக இருக்கிறது" -என்று தங்களது வேதனையை கொட்டித்தீர்த்தனர். மேலும், நாளை மறுநாள் தூத்துக்குடிக்கு வருகின்ற துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக பேசி மனு அளிக்க நேரம் ஒதுக்கித்தர வேண்டும்.. தவறும் பட்சத்தில் தாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த படி, கருப்புக்கொடி கட்டி தங்களது எதிர்ப்பை காட்டுவோம் என்று வட்டாட்சியரிடம் தெரிவித்தனர். பின் உடனடியாக வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம் செல்போனில் பேசி விவசாயிகளின் கோரிக்கை குறித்து கூறி துணை முதல்வரை விவசாயிகள் சந்திக்க நேரம் ஒதுக்க  வாய்ப்புள்ளதா? என்று கேட்டு நாளை(13.11.2024) செல்வதாக விவசாயிகளிடம் கூறினார். இதனை ஏற்ற விவசாயிகள் வட்டாட்சியரிடம், நாளை தங்களுக்கு சாதகமான பதில் வரவில்லை என்றால் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிச் சென்றனர்.