தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!


தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.


ரம்ஜான், தீபாவளி, பொங்கல், கிறிஸ்மஸ் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடக்கும். 

வரும் 31ந்தேதி தீபாவளி பண்டிகைகொண்டாடப்பட உள்ளதையொட்டி நேற்று  இரவு முதல் எட்டயபுரம் சந்தைக்கு சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆடுகளை வாங்க வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் திரண்டிருந்தனர்.

பால்குடி மாறாத குட்டி ஆடு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.800 என்ற விலையில் ரூ.7 ஆயிரம்முதல் ரூ30 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து  ஆடு வாங்க வந்த வியாபாரி உதயகுமார்  கூறும்போது, ‘‘எட்டயபுரம் சந்தைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. விலையும் கடந்தாண்டை விட அதிகமாகவே உள்ளது. ரூ.7ஆயிரம் விலையுள்ள ஆடு ரூ.30 ஆயிரம் வரை விற்கப்பட்டது’எட்டயபுரம் சந்தைக்கு இந்தஆண்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிகம் வந்துள்ளனர். ஆடுகளின் விலை தான் மிகவும் அதிகமாக உள்ளது. 10 கிலோ எடையுள்ள குட்டியை ரூ.10 ஆயிரம் வரை சொல்கின்றனர். இந்தாண்டு சுமார் 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றார்.