ஆங்கிலத்தில் பேசிய தேர்தல் செலவீன பார்வையாளர்: என்ன பேசுகிறார் என்று தெரியாமல் திகைத்து குழம்பி போய் நின்ற அரசியல் கட்சியினர்:அதிகாரிகள் முறையாக மொழிபெயர்க்கவில்லை என்று குற்றச்சாட்டு - விளாத்திகுளத்தில் பரபரப்பு!
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் செலவு செய்வது தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு தேர்தல் செலவின பார்வையாளர் சிவ் பிரசாத் பால் கலந்து கொண்டு தலைமை தாங்கி, தேர்தலில் அரசியல் கட்சியினர் செலவு செய்வது தொடர்பாகவும்,வங்கி கணக்கு பராமரிப்பது தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கினார்.
அவர் அரசியல் கட்சியினரிடம் ஆங்கிலத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்த தேர்தல் செலவீன பார்வையாளர் சிவ் பிரசாத் பாலால்,இவர் ஆங்கிலத்தில் என்ன பேசுகிறார் என்று தெரியாமலே அரசியல் கட்சியினர் குழப்பத்தில் ஒன்றும் புரியாமல் திகைத்து உட்கார்ந்திருந்தனர்.
தேர்தல் செலவின பார்வையாளர் ஆங்கிலத்தில் பேசுவதை தேர்தல் நடத்தும் அலுவலர்களும் முறையாக மொழிபெயர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டை அரசியல் கட்சியினர் முன் வைத்தனர்.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி என்பது விவசாய மக்கள் அதிகம் உள்ள தொகுதியாகும், விளாத்திகுளம் தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாகத்தான் பள்ளி,கல்லூரிகள் அதிகரித்துள்ளது, இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் கட்சியினர் பெரும்பாலானோர் 40 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்த வரும் தேர்தல் அதிகாரிகள் ஓரளவுக்கு நாளும் தமிழ் தெரிந்திருந்தால் இங்கு உள்ள அரசியல் கட்சி அமைப்பினருக்கு பெரும் உதவியாக இருக்கும். இல்லையென்றால் சரியான மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என்பது அரசியல் கட்சியினர் கோரிக்கையாக உள்ளது.
இந்தகூட்டத்தில் விளாத்திகுளம் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன்,சுபா, உதவி தேர்தல் செலவின பார்வையாளர் சோமசுந்தரம், தேர்தல் துணை தாசில்தார் ஆரோக்கியமணி, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன், காவல் ஆய்வாளர் சக்திவேல் உட்பட ஆங்கிரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.