எட்டையாபுரம் அருகே காணாமல் போன முதியவர் மூன்று நாட்கள் கழித்து சடலமாக மீட்பு - போலீசார் விசாரணை!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள கடலையூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (75). இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சுப்பையா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 12-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பையா காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 


இந்நிலையில் இன்று சின்னமலைக்குன்று கிராமத்தில் உள்ள கண்மாய்கரை பகுதியில் இறந்த நிலையில் முதியவர் சடலம் கிடந்துள்ளது. இதனைப்பார்த்த கிராம மக்கள் எட்டையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வு ஆய்வுக்காக  எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலையூரில் காணாமல் போன சுப்பையா தான் சடலமாக கிடந்தது தெரிய வந்தது. எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.