விளாத்திகுளத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் : வெற்றியாளர்களுக்கு LED TV, மிக்ஸி, பேன் பரிசுகள்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் பூஞ்சிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 54 ஜோடி மாடுகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்து போட்டியைத் தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் முதலிடத்தினை பெற்றன. விளாத்திகுளம் பகுதியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிபாய்ந்த காளைகளை மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் நீண்ட தூரம் சாலையின் இருபுறமும் கூடியிருந்து ஆர்வமுடன் கண்டு களித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி பரிசுத்தொகை மற்றும் LED TV, மிக்ஸி, பேன் உள்ளிட்ட பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.