விளாத்திகுளம்  அருகே மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்று திமுக கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் முத்துப்பாண்டி (55) இவர் அப்பகுதியில் கடந்த 20 வருடங்களாக திமுக கிளைச்செயலாளராக இருந்து வருகிறார்.



இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர்களை ஆதரித்து " ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் " தேர்தல் பரப்புரைக்காக   தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக, லட்சுமிபுரம் கிராமத்தில் திமுகவினரை அழைத்துச்செல்லுவது தொடர்பாக மற்றொரு திமுக கட்சி நிர்வாகியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைசேர்ந்த  பாலையா என்பவரின் மகன் ஞானசேகரன் (47) என்பவர் மது போதையில், முத்துப்பாண்டியை வழிமறித்து நானும் திமுக கூட்டணி கட்சியில் தான் இருக்கிறேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநாட்டிற்கு என்னை ஏன் அழைக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த அறிவாளை எடுத்து முத்துப்பாண்டியை கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார், உடனடியாக அக்கம் பக்கத்தினர் முத்துப்பாண்டியை மீட்டு ராமநாதபுரம் மாவட்டம் உச்சநத்தம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்தனர் பின்பு 108 வாகனம் மூலம் முத்துப்பாண்டியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


இதனை அடுத்து தப்பி ஓடிய ஞானசேகரனை  விளாத்திகுளம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திமுக நிர்வாகியை அதன் கூட்டணி கட்சியினரே அறிவாளை எடுத்து வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.