விளாத்திகுளம் மார்க்கண்டேயன் MLA மீது புகார்களை அடுக்கிய திமுக நிர்வாகி!

"நாங்களும் DMK-தான்... ஸ்டாலின் ஐயா நீதி கொடுக்கனும்" : தன் சொந்த இடத்தை ஆக்கிரப்பு செய்து ரேசன் கடை கட்டுவதாக விளாத்திகுளம் திமுக MLA மார்க்கண்டேயன் மீது தமிழ்நாடு CM, DGP-யிடம் பரபரப்பு புகார் அளித்த திமுக நிர்வாகி!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பூரைச் சேர்ந்த சோலையப்பன் என்பவரது மகனான எஸ்.எஸ்.ரவி, தற்போது திமுகவில் புதூர் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனக்கும், தன்னுடைய சகோதர - சகோதரிகள் என 6 பேருக்கும் வெம்பூரில் சொந்தமாக இருக்கும் 49 சென்ட் இடத்தை விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தன் மீது உள்ள விரோதத்தால் ஆக்கிரமிப்பு செய்து எனக்கு தெரியாமலேயே அங்கு ரேசன் கடை கட்டுவதற்கு பூமி பூஜை செய்து தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வாதிகாரியாக செயல்படும் விளாத்திகுளம் திமுக MLA மீது நடவடிக்கை எடுத்து தங்களுடைய சொந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காவல்துறை DGP-யிடம் புகார் அளித்துள்ளார். திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது திமுக நிர்வாகியே புகார் அளித்த இச்சம்பவம் விளாத்திகுளம் தொகுதி திமுக கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, தங்களுடைய நிலத்தில் பூமி பூஜை செய்தது முறையா? விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனிடம், புதூர் திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ரவி செல்போனில் கேட்ட ஆடியோ ஒன்றையும் ரவி வெளியிட்டுள்ளார்.... 

(அதில், "நான் உங்களிடம் மனுவும் கொடுத்திருக்கிறேன், வழக்கும் போட்டு இருக்கிறேன்... நிலுவையில் இருக்கும் போது இது போன்று செய்யலாமா... நீங்கள் முன் உதாரணமாக இருக்கலாமா..? என்று கேட்பது போன்றும், அதற்கு சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், "எந்த இதில் கேஸ் போட்டு இருக்கிறீர்கள்... ஆர்டர் வரட்டும், தாசில்தார் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்" என்று பதில் கூறுவது போன்றும்... அதற்கு ரவி, "தாசில்தார் விஏஓ-க்கு எதுவும் தகவல் சொல்லவில்லை.., எங்களிடமும் இந்த தகவல் கொடுக்காமல் எதுவும் செய்ய மாட்டோம் என்று தாசில்தார் கூறியுள்ளார்" என்று சொல்லியதற்கு சட்டமன்ற உறுப்பினர் "என்னவென்று பேசுவோம்.. என்று கூறுவதோடு உரையாடல் முடிகிறது.)

மேலும், புதூர் திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளராக எஸ்.எஸ்.ரவி கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் இந்த விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டதால், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தற்போது வரை தன் மீது விரோதப் போக்கில் நடந்து கொள்வதாகவும், தொகுதி மற்றும் ஒன்றியத்தில் நடைபெறும் எந்தவித கட்சி நிகழ்ச்சிகளுக்கும் தன்னை அழைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார். என் மீது கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடுதான் எங்களுடைய 49 சென்ட் நிலத்தை ஆக்கரிமித்து, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அதில் ரேஷன் கடை கட்டும் முயற்சியில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். இது பற்றி அவரிடமும் மனு கொடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடர்ந்துள்ளேன். அத்தோடு, தங்களது தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவனிடம், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனின் சர்வாதிகார நடவடிக்கை பற்றி கூறி தன்னுடைய நிலத்தில் ரேஷன் கடை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும்... அதற்கு அமைச்சர் கீதா ஜீவன் நான் சட்டமன்ற உறுப்பினர் பேசிக் கொள்கிறேன் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அமைச்சரின் பேச்சையும் மதிக்காதாமல் செயல்படுவதாக கூறுகிறார். இந்த நிலையில் கடந்த திங்களன்று தான் சென்னை சென்றிருந்த போது, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அரசு அதிகாரிகளின் உரிய அனுமதி இன்றியும், சட்டவிரோதமாக எங்களது இடத்தில் அவசரகதியாக ரேஷன் கடைக்கு பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளார். இதற்கு முன்பும் கூட கடந்த சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் என்னுடைய அனுமதி இன்றி அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்டினார். அப்போது நான் கேட்டதற்கு என்னுடைய MLA நிதியில் அந்த பணி நடைபெறுகிறது... கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என என்னிடம் தன்மையாக பேசி இடத்தை கொடுக்கச்செய்தார் எனக் கூறி இங்குள்ள இங்குள்ள அங்கன்வாடி மையக்கட்டிடமும் என்னுடைய இடத்தில் தான் அமைந்துள்ளது என்று கூறினார். பரம்பரையாக திமுகவில் இருக்கும் தங்களுக்கு இங்கு எந்த மதிப்பும் இல்லை... இருந்தாலும் தொடர்ந்து திமுகவில் செயல்பட்டு வந்த எங்களுடைய தாயார் பெயரில் இருக்கும் 49 சென்ட் சொந்த இடத்தையும் தன்னுடைய சொந்த வன்மத்தை காட்டும் விதமாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இதுபோன்று நிலத்தை அபகரிப்பு செய்தை தடுத்து தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் கோரிக்கை வைத்துள்ளார் திமுக நிர்வாகி எஸ்.எஸ்.ரவி. 

இது தவிர இவரது உடன் பிறந்தவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது, 

நேற்றைய தினம் தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்து வந்தோம்... புகார் அளித்த பின்பும் கூட எங்களுடைய இடத்தில் இப்படி வேலை வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்றால் இவர்கள் மேலிடத்தை மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம். இப்படிப்பட்ட மார்க்கண்டேயனை பதவி விலக வைக்கவேண்டும் என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார்.. ரவியின் உடன் பிறந்த சகோதரர் திருமலை.

அதேபோன்று அவருடைய சகோதரிகள் பேசிய போது; 

இது எங்களுடைய தாயார் பெயரில் உள்ள நந்தவனம் இடம், இதில் எப்படி ரேசன் கடை கட்டலாம்... நாங்களும் DMK-தாங்க.. ஒரே DMK குடும்பத்துக்குள்ளேயே இப்படி செய்தால் என்ன சொல்வது. குடும்பத்துல பிரச்சினை என்றால் தாய், தகப்பன் கிட்ட போகிற மாதிரி நாங்க எங்க தலைவர் மு.க.ஸ்டாலின்கிட்ட வந்திருக்கோம்... ஸ்டாலின் ஐயாதான் எங்களுக்கு நீதி கொடுக்கனும்... நாங்கள் எங்களது மகன், மகள் என 27 வாரிசுகள் உள்ள இந்த இடத்தை இப்படி அபகரிப்பது நியாயமில்லை.. எங்கள் இடம் எங்களுக்கு வேண்டும் அதற்காக நாங்க இப்பவே இங்க உட்கார ரெடி என தங்களுடைய மனவேதனையை கொட்டித்தீர்த்தனர்.

ஏற்கனவே, தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சில திமுகவைச் சேர்ந்த நபர்கள் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் நிகழ்வுகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது அதே விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முதல்வரிடமும், டிஜிபி-யிடமும் புகார் அளித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரிய தீர்வு கண்டு சொந்த கட்சியினருக்குள் வந்த இப்பிரச்சனையை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்......