விளாத்திகுளத்தில் நடைபெற்ற "மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா" : திரளான விவசாயிகள் பங்கேற்பு!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாவட்ட வேளாண்மை துறை சார்பில், மாபெரும் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பச்சை துண்டு தலைப்பாகை அணிந்து கொண்டு விவசாய முறைகள் பற்றியும், சிறுதானியங்களின் மகத்துவம் பற்றியும் விவசாயிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார். மேலும் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்காக கொண்டுவந்துள்ள சிறப்பு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். இந்த சிறுதானிய திருவிழாவில் சத்து மிகுந்த பாரம்பரிய தானிய வகைகள், இயற்கை உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை கண்காட்சி படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதேபோன்று விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்காக வழங்கப்பட்டு வரும் வேளாண் கருவிகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் வேளாண் அறிஞர்கள் மூலமாக விவசாய முறைகள் மற்றும் இடுபொருட்கள் பற்றிய விழிப்புணர்வு வழங்கப்பட்டது.