விளாத்திகுளம் அருகே சூரங்குடி அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு "பறவைக்காவடி & அக்கினிச்சட்டி" எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பெத்தனாட்சி அம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஏராளமான அக்கினிச்சட்டி மற்றும் "பறவைக்காவடி" எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதன்படி, கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து அம்மன் கோவில் வரை பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள் "பறவைக்காவடி" மற்றும் அக்கினிச்சட்டி எடுத்து வந்தவர்களிடம் தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர். இதில் வழி நெடுகிலும் பக்தர்கள் தங்களது குழந்தைகளையும் பறவைக் காவடி எடுத்து வந்த நபரிடம் கொடுத்து குழந்தைகள் நலமுடன் இருக்க வேண்டி வணங்கிக்கொண்டனர்.


மேலும் கோவில் திருவிழாவையொட்டி இதற்கு முன்னதாக சப்பரத் தேர் பவனி திருவிழாவானது, கரகாட்டம்: வானவேடிக்கையுடன், நையாண்டி மேளம் முழங்க பக்தர்கள் வெள்ளத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.