விளாத்திகுளம் அருகே எம்.குமாரசக்கனபுரத்தில், கோவில் திருவிழாவை முன்னிட்டு அக்கினிச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம்.குமாரசக்கனபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செண்பக விநாயகர் கோவில், துர்க்கையம்மன் கோவில், ஸ்ரீ மாரியம்மன் மற்றும் கருப்பசாமி கோவில் கொடை திருவிழாவானது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில், விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், டி.எஸ்.பி அசோகன் உள்ளிட்ட சூரங்குடி காவல்துறையினர் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதையொட்டி, கோவிலில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல வகையான மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டு பின்னர் தீபாராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தும், முளைப்பாரி எடுத்தும் கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதனையடுத்து பொதுமக்களுக்கு அசைவ விருந்து அன்னதானமாக வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் இப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர். மேலும், இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர் தலைமையில் தனுஷ்கோடி, கந்தசாமி, சுந்தர கணபதி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.