விளாத்திகுளம் பகுதிகளில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நலன் கருதி அரசு மணல் குவாரி அமைக்க கோரிக்கை...!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் வைப்பாற்றிலிருந்து இரவு நேரங்களில் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மூலம் ஆற்று மணல் திருடி (ஒரு வண்டி மணல் ரூ‌.1000 முதல் ரூ.1500 வரை) அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வந்த நிலையில், அண்மையில் பத்திரிகை செய்தி மற்றும் ஊடகங்களில் மாட்டு வண்டிகள் மூலம் ஆற்று மணல் திருட்டு தொடர்பாகவும்,  வெளியான செய்தியின் எதிரொலியாக காவல் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் தற்சமயம் மணல் திருட்டு பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இது போன்று இரவு நேரங்களில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுப்பதற்காகவும், விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கும், ஏழை எளிய மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் தேவைப்படும் மணலை விளாத்திகுளம் வைப்பாற்றில் இருந்து நீர் வளத்தை பாதிக்காதவாறு கனரக வாகனங்களை பயன்படுத்தாமல் டோக்கன் முறையை நடைமுறைப்படுத்தி மாட்டு வண்டிகள் மூலம் மட்டும் ஆற்று மணலை விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி, அரசு அனுமதியுடன் வைப்பாற்றில் மணல் குவாரி அமைத்து அதிகாரிகள் மேற்பார்வையில் மாட்டுவண்டிகள் மூலம் ஆற்று மணல் அள்ளி கட்டுமான பணிக்கு மணல் தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்வது நடைமுறைக்கு வந்தால் விளாத்திகுளம் தொகுதியைச் சேர்ந்த 600க்கும் அதிகமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் காக்கப்படும் என்பது முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது. 


இப்பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுத்ததோடு மட்டுமின்றி, மக்களின் மணல் தேவையை பூர்த்தி செய்ய விளாத்திகுளம் வைப்பாற்றில் அரசு சார்பில் மணல் குவாரி அமைத்து டோக்கன் முறையில் மணல் விற்பனை நடைபெற்றால் "காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து இரவு நேரங்களில் சட்ட விரோதமாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி‌ அதிக விலைக்கு விற்கும் தேவையே எங்களுக்கு (மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு) இருக்காது..." என்பது அவர்களுடைய ஒருமித்த கருத்தாகவும், கோரிக்கையாகவும் உள்ளது. எனவே தமிழக அரசு விளாத்திகுளம் வைப்பாற்றில் மாட்டு வண்டி மூலம் மட்டும் மணல் எடுத்து நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் அரசு சார்பில் உடனடியாக மணல் குவாரி அமைத்து தர வேண்டும் என்று மாட்டுவண்டி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்....


(தற்போது  விளாத்திகுளம் காவல் உட்கோட்டபகுதிகளான   பனையடிபட்டி,சிங்கிலிபட்டி, சித்தவநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, N.வேடப்பட்டி அச்சங்குளம்,வைப்பார் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது).