விளாத்திகுளம் அருகே அதிக மின் அழுத்தம் காரணமாக மின்சாரப் பொருட்கள் சேதம்: இழப்பீடு வழங்க கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கந்தசாமிபுரம் மற்றும் சேர்வைகாரன்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களிலும் கடந்த 09-12-2025 செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட அதிக மின் அழுத்தம் காரணமாக கந்தசாமிபுரம் கிராமத்தில் பல்வேறு வீடுகளில் உள்ள LED டிவிகள், குளிர்சாதன பொருட்கள், மின்விசிறி, மின்விளக்குகள், க்ரைண்டர்,குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட மின்சார பொருட்கள் சேதம் அடைந்து தற்போது பயன்படுத்த முடியாத சூழலில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
கந்தசாமிபுரம் கிராமத்தை பொருத்தவரை அப்பகுதி மக்கள் முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து வரும் நிலையில், மின்னழுத்தம் காரணமாக பழுதான மின்சாதன பொருட்களை சரி செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதாக கூறுகின்றனர்.
மின் கட்டண தொகையை ஒரு நாள் தாமதமாக செலுத்தினாலும், அல்லது மின் கட்டணத் தொகையை செலுத்தாமல் இருந்தால் பீஸ் கேரியரை அதிரடியாக பிடுங்கி அபராத தொகை விதிக்கும் மின்வாரியத் துறையினர், மின்சாரத்துறையின் அலட்சியம் காரணமாக பழுதான மின்சாரப் பொருட்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர், மின்சாரத்துறை நிவாரணத் தொகை வழங்காத பட்சத்தில் அக்கிரம மக்கள் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.