விளாத்திகுளம் அருகே பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனியில் லட்சக்கணக்கில் விவசாயிகள் பணம் மோசடி : ஒப்புக்கொண்ட CEO பகீர் ஆடியோ..!
தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மேற்பார்வையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் "விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட்" கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் இப்பகுதி விவசாயிகளுக்காக உரங்கள் மற்றும் விதைகள் விற்பனை செய்வதோடு, விவசாயிகளிடம், விளைப்பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனியில் விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஏராளமான விவசாயக் குழுக்களாக பதிவு செய்து, இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக எட்டையபுரம் கனரா வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் விவசாயக்கடன் பெற்று, பணத்தை இந்த கம்பெனி மூலமாகவே திருப்பி செலுத்தி வந்துள்ளனர். ஆனால், புதூர் அருகே உள்ள கந்தசாமிபுரம், மணியக்காரன்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு கனரா வங்கியில் இருந்து அவர்கள் வாங்கியிருந்த கடனை திருப்பி செலுத்தவில்லை என்ற வங்கி நோட்டீஸ் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் அந்த வங்கி நோட்டீஸ்-உடன் சென்று விளாத்திகுளம் புதூர் பயர் உற்பத்தியாளர்கள் கம்பெனிக்கு நேரடியாக சென்று அதன் நிர்வாக இயக்குனர் பவித்ராவிடம், தாங்கள் கொடுத்த பணத்தை வங்கியில் முறையாக செலுத்தவில்லையா? என்று கேட்டதற்கு... பலமுறை தான் வங்கியில் விரைவில் செலுத்தி விடுகிறேன் என்று விவசாயிகளிடம் கூறி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் தற்போது வரை ஏராளமான விவசாயிகள் வங்கிக்கு செலுத்தப்பட வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்தாமல் மெகா மோசடியில் ஈடுபட்டுள்ளார். பல நாட்களாக பொறுமை காத்த விவசாயிகள் இன்று புதூரில் உள்ள பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனிக்கு நேரடியாக சென்று வங்கியில் பணம் செலுத்தாதது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த புதூர் காவல் நிலைய போலீசார், வருகின்ற செவ்வாய்க்கிழமை வரை காலக்கெடு கேட்டு அதற்குள் பணம் செலுத்தப்படவில்லை என்றால் காவல் நிலையம் வந்து புகார் அளியுங்கள் என விவசாயிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் விவசாயிகள் தங்களது கோரிக்கையாக, ஏராளமான விவசாயிகளிடம், மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டிருக்கும் "விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனியின்" நிர்வாக இயக்குனர் பவித்ரா மீது உரிய நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை வங்கியில் கட்டுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து பயர் உற்பத்தியாளர்கள் கம்பெனி நிர்வாக இயக்குனர் பவித்ராவிடம் கேட்டபோது;
நாங்கள் விவசாயிகள் கொடுத்த பணத்தை தங்களது கம்பெனியின் வளர்ச்சிக்காக தான் பயன்படுத்தி உள்ளோம். ஆனால் நாங்கள் செய்தது தவறுதான் என அவரே ஒற்றுக் கொண்டுள்ளார். அதேபோன்று வங்கியில் விவசாயக்கடன் செலுத்த பணத்தை திரட்டும் முயற்சியில் தான் தற்போது ஈடுபட்டு வருவதாகவும், முடிந்தவரை செய்தி போடாமல் தவிர்க்க வேண்டும் என்றும்... செய்தி வெளியிட்டால் விவசாயிகளுக்கு எங்களது கம்பெனியின் மீது நம்பிக்கை போய்விடும் எனவும், விவசாயிகளிடமிருந்து வரவேண்டியிருக்கும் ரூ.1 கோடியே 33 லட்சம் பணத்தை திரும்ப வாங்க முடியாது கூறி, விவசாயிகளின் பணத்தை மோசடி செய்திருப்பதை அவரே தெள்ளத்தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார்.