விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற "சோமவாரப் பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத "சோமவார பிரதோஷ தினத்தை" முன்னிட்டு நந்தி பெருமானுக்கு தாமரைப்பூ, அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை உள்ளிட்ட பல வகையான மாலைகள் சாற்றப்பட்டு பிரமாண்டமாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும் பிரதோஷம் போன்ற முக்கிய தினங்களில் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், இன்று ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற "புரட்டாசி மாத சோமவாரப் பிரதோஷத்தை" முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தாமரைப்பூ, அருகம்புல், எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர். மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.