விளாத்திகுளம் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்த ராசையா என்பவரின் மகள் சசி காஞ்சனா (19). இவர் விளாத்திகுளத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் சசி காஞ்சனா புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவரின் காதல் விவகாரம் தெரிந்த பெற்றோர் மாணவியை கண்டித்து, மாணவி காதலித்து வந்த நபரிடம் பேசக்கூடாது என கூறி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே சசி காஞ்சனாவின் கைபேசியை வாங்கி வைத்துள்ளனர். இருப்பினும் நேற்று (17.09.2023) மாலையில் சசி காஞ்சனா தனது பெற்றோருக்கு தெரியாமல் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்ட அவரது பெற்றோர் சத்தம் போட்டு உள்ளனர். இதனால் நேற்று மாலை வீட்டில் இருந்து காணாமல் போன மாணவி சசிகஞ்சனா, இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள மாட்டுத் தொழுவில் நார் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் இருந்த சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் மரணம் குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவு செய்து சங்கரலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.