விளாத்திகுளத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயத்தில் 500 லிட்டர் பதநீர் வழங்கிய கிறிஸ்துவர்கள்: ஜாதி,மத பேதமின்றி அனைத்து மக்களும் வாங்க குவிந்தனர்!




இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவு கூறும் விதமாக உலகம் முழுவதும் கிறிஸ்துவர்களால் புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஜெபக்கூட்டங்கள் இன்று நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரநகரில் அமைந்துள்ள பேதுருவின் ஆலயத்தில் (CSI) பனைத் தொழில் செழிக்க, பதநீர் மற்றும் கருப்பட்டி நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டி புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பனை மரத்திலிருந்து எடுத்து வரப்படும் பதநீரை ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்து பதநீரை ஜாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் இலவசமாக காலை 5 மணி முதல் தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது... இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பதநீரை வழங்கி மகிழ்ச்சியுடன் பருகினார். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் ஆலயத்திற்கு வந்து பதநீரை பருகி அதை வாட்டர் கேன் மற்றும் பாத்திரங்கள் மூலம் தங்களது வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் புனித வெள்ளியை முன்னிட்டு பதநீர் இலவசமாக வழங்குவது வழக்கமான ஒன்று எனவும், 

இன்று தற்போது வரை சுமார் 500 லிட்டர் பதநீர் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.