எட்டையபுரத்தில் பாரதி இல்லத்தை சீரமைக்க பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் இல்லம் முறையான பராமரிப்பின்றி செயல்பட்டு வந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாரதியின் வரலாற்று சின்னமாக விளங்கும் பாரதி இல்லத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து பெருமளவில் சேதம் அடைந்தது. இதனையடுத்து பாரதியார் ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த பின்னர் தமிழக அரசு சார்பில் பாரதி இல்லத்தை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் தற்போது வரை நினைவுச் சின்னமாக விளங்கும் பாரதியின் இல்லம் சீரமைக்கப்படாமல் தொடர்ந்து மந்தமான நிலையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள் எட்டயபுரத்தில் அமைந்துள்ள பாரதியினத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. ஆகையால் பாரதி இல்லத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் பணிகள் முறையாக நடைபெறாததால் தமிழக அரசை கண்டித்து இன்று எட்டையபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைவர் சரவணகிருஷ்ணன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட பாஜகவினர், "பாரதி இல்லத்தை புதுப்பிக்க பிச்சை போடுங்கள்.." என்று நூதன முறையில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதோடு பாரதியார் மணிமண்டபம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது....