78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு எட்டயபுரத்தில் பாஜகவினர் பைக் பேரணி! 


நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் மாபெரும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதையொட்டி எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றியத் தலைவர் சரவணகுமார் தலைமையில் கட்சியினர் தேசிய கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி சுதந்திர தினத்தை கொண்டாடினர். அதைத்தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், தங்களது இரு சக்கர வாகனங்களில் தேசிய கொடியை பொருத்தியவாறு இருசக்கர வாகன பேரணியாக சென்று எட்டையபுரத்தில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். அதேபோன்று பாரதியாரின் இல்லம் மற்றும் மணிமண்டபத்திற்கு சென்று மகாகவி பாரதியாரின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், இந்நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் ஆத்திராஜ் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.