விளாத்திகுளம் அருகே 40' அடி இம்மானுவேல் சேகரன் பேனருக்கு பாலாபிஷேகம் - தப்பு, தாளங்கள் முழங்க பால்குடம் எடுத்து பொதுமக்கள் ஊர்வலம்!
தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு தினத்தை கடைபிடிக்கும் விதமாக தப்பு-தாளங்கள் முழங்க நூற்றுக்கணக்கானோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து நாகலாபுரம் மெயின் பஜாரில் சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த 40 அடி உயரம் கொண்ட தியாகி இமானுவேல் சேகரனின் முழு உருவ பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். இதைத்தொடர்ந்து இம்மானுவேல் சேகரனின் முழு உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி... தீபாரதனை காட்டி மரியாதை செலுத்தினர். இதில் நாகலாபுரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இம்மானுவேல் சேகரனை வணங்கி அஞ்சலி செலுத்தினர்.