விளாத்திகுளம் அருகே "அசைவ விருந்து" வழங்கி அசத்திய இஸ்லாமியர்கள் - ஜாதி, மத பேதமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மக்கள் ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் சமம் என்பதை உணர்த்தும் விதமாக மாபெரும் "அசைவ சமத்துவ விருந்து" வழங்கி அசத்தியுள்ளனர். இந்த சமத்துவ விருந்தில் அரியநாயகிபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சமத்துவ விருந்தில் வழங்கப்பட்ட சுவையான அசைவ விருந்தை ஒன்றாக கூடி அமர்ந்து ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்தனர். மேலும் விருந்தில் கலந்து கொண்ட இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் உணவருந்தியப் பின் ஒன்றாக கூடி அமர்ந்து பழைய நினைவுகளை சுவைத்து அன்பையும், பாசத்தையும் பகிர்ந்துகொண்டனர்.
மேலும், அரியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் கந்தூரி திருவிழாவைக் கொண்டாடும் விதமாக ஆண்டுக்கு ஒரு முறை இக்கிராமத்தில் 3 நாட்கள் வெகுவிமர்சையாக திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இத்திருவிழாவில் இக்கிராமத்தில் இருந்து வெளியூர், வெளிநாடு என பணி மற்றும் தொழில் ரீதியாக சென்றிருந்தவர்கள் கூட தவறாமல் கலந்து கொண்டு சொந்த பந்தங்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தக் கந்தூரி திருவிழாவில் பங்கேற்க படையெடுத்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது