காதணி விழாவில் வாக்குவாதம் - ஆத்திரத்தில் கொலை- எட்டையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் மூன்று பேர் கைது !



தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஊர் காலன் என்பவரின் மகன் பெரியநாயகம் (33). நேற்று (ஞாயிறு) தனது உறவினரான கவர்ணகிரியைச் சேர்ந்த செந்தூர்க்கனி என்பவரது இல்ல காதணி விழா நிகழ்ச்சிக்காக இருக்கன்குடி சென்றுள்ளார்.  பெரியநாயகம் அதிகமாக மது அருந்தி இருந்த காரணத்தினால் அவர் அவர்கள் சென்ற வாகனத்தில்  இருந்துள்ளார். அவருக்கு உறவினர் ஒருவர் சாப்பாடு கொடுக்க சென்றபோது  அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கவர்ணகிரியைச் முனியசாமி எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.



இதனால் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டுள்ளனர். செல்லும் வழியில்  எட்டயபுரம் அருகே கீழ ஈராலில் உள்ள டீக்கடை ஒன்றில் அனைவரும் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, நிகழ்ச்சியில் பிரச்சனையில் ஈடுபட்ட முனியசாமி மற்றும் சிலர் மது போதையில் வாகனத்தில் இருந்த பெரியநாயகத்தை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.இதுபற்றி தகவல் அறிந்த எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகொலை செய்யப்பட்ட பெரிய நாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது மட்டுமின்றி  இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை கவர்ணகிரி பகுதியைச் சேர்ந்த  முனியசாமி( 36) மற்றும் அவரது உறவினர் எட்டயபுரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த  பொன் மாடசாமி(26) ஓட்டப்பிடாரம் இந்திரா நகர் கீழ தெருவை சேர்ந்த மாரி செல்வம் (22) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.




விசாரணையில் மது போதையில் இருந்த பெரியநாயகம் கோவிலுக்கு சென்ற இடத்தில் கீழே விழுந்துள்ளார். அவரை முனியசாமி தான் தள்ளி விட்டதாக நினைத்து  பெரிய நாயகத்துடன் வந்த சிலர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி, மாரி செல்வத்தை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பி உள்ளார். பின்னர் பொன் மாடசாமியை தொடர்பு கொண்ட முனியசாமி, காதணி விழாவிற்கு சென்ற போது பெரிய நாயகத்தினால் தான் அசிங்கப்பட்டு விட்டதாகவும், அதற்குப் பழி தீர்க்க வேண்டும் என்றும் அரிவாளை எடுத்து வரும்படி கூறியுள்ளார். அதன்படியே பொன் மாடசாமியும் அரிவாளுடன் வந்துள்ளார். பின்னர் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில்  கோவிலில் இருந்து வாகனத்தில் திரும்பியவர்களை பின் தொடர்ந்து வந்துள்ளனர். அனைவரும் கீழ்ஈராலில் டீ குடிக்க இறங்கியதும் பெரியநாயகம் மட்டும் வாகனத்தில் படுத்திருப்பதை பார்த்த முனியசாமி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார். இதையெடுத்து மூன்று பேரும் இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பேரில் போலீசார் சிறையில் அடைத்தனர். காதணி விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைத்து ஆத்திரத்தில் நடைபெற்ற சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.