விளாத்திகுளத்தில் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் கோஷம்!




கடந்த சில தினங்களாக அதிமுக - பாஜக இடையே வார்த்தைப்போர் முற்றிவரக்கூடிய சூழ்நிலையில் இரு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்துவந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையான வார்த்தைகளால் பயன்படுத்தி விமர்சனம் செய்தும், அதிமுக கட்சியை இழிவு படுத்தியும் பேசியிருந்தது அதிமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



அதிலும் குறிப்பாக தற்போது விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு விளாத்திகுளம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எதிர்த்து அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வின்போது விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் NK.பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்,பால்ராஜ் விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, எட்டையாபுரம் நகர செயலாளர்  ராஜகுமார், மகளிர் அணி பிரியா சாந்தி, தகவல் தொழில் நுட்ப அணி சுரேஷ்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் தற்போது விளாத்திகுளம் காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு - நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது....