விளாத்திகுளம் தாய், மகள் கொலை குற்றவாளியை தென்மண்டல ஐஜி தலைமையில், 200 க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து 6 ட்ரோன் கேமிராக்களை பறக்கவிட்டும் தீவிர தேடுதல் வேட்டை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலநம்பிபுரத்தில் கடந்த மார்ச் 3 ஆம் தேதி (நேற்று முன்தினம்) வீட்டிலிருந்த தாய், மகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில், எட்டையபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடத்தினர். பிடிபட்ட 10 பேரில் மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் (28), தாப்பாத்தியை சேர்ந்த முகேஷ் கண்ணன் (25) ஆகிய இருவருக்கு கொலைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பதும், அவர்கள் கஞ்சா போதையில் இந்த கொலை & கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.மேலும், இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து,தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில்,நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதி மணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் மற்றும் 5 டிஎஸ்பிக்கள் 20 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 9 தனிப்படை போலீசார் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன்கள் பறக்கவிட்டு தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறிப்பாக அயன்வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழக்கரந்தை ரெகுராமபுரம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்..