அதிமுக:பாஜக கூட்டணியைப் பார்த்து திமுக கூடாரமே கதிகலங்கி போச்சு" - விளாத்திகுளம் அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமையில், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியத்திற்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றியச் செயலாளர் போடுசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன் உட்பட கட்சி நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ கட்சியினரிடம் பேசுகையில், தற்போது தமிழக மக்களுக்காக அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது, தற்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைந்திருப்பதைக் கண்டு திமுக கூடாரமே கதிகலங்கி இருக்கிறது என்றும், அதிமுக அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது, அதனை அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகளவில் அதிகரித்து சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது என திமுக அரசை விமர்சனம் செய்தும் பேசினார். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பூத் கமிட்டி நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி பூத் கமிட்டியில் இளைஞர்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் பிரிவில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறியதோடு கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கை பதிவு விண்ணப்ப படிவங்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சியினருக்கு "ஸ்டாலினின் மாடல் அரசின் வெற்று விளம்பர பட்ஜெட்" எனும் தலைப்பில் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.