விளாத்திகுளம் அருகே சின்னூரில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்: சீறிப்பாய்ந்த 83 ஜோடி காளைகள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூரில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கருப்பசாமி திருக்கோவிலின் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, இராமநாதபுரம்,மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர்,தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 83 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. இப்போட்டியில் சிறிய மாடுகளுக்கு 6 மைல் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மைல் தூரமும் மற்றும் தேன்சிட்டு மாடுகளுக்கு 4 மைல் தூரமும் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கி கௌரவித்தனர்.