"போடாத ரோட்டுக்கு விளம்பர போர்டு" : ரூ‌.4.63 கோடி முறைகேட்டை கண்டித்து எட்டையபுரத்தில் பாஜகவினர் போராட்டம்..!


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே அயன்ராசாப்பட்டியிலிருந்து கீழ்நாட்டுக்குறிச்சி, சக்கிலிப்பட்டி வழியாக தாப்பாத்தி கிராமம் வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் 2022-2023ன் கீழ் ரூ.4 கோடியே 63 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சாலைகள் முழுமையாக போடப்படாமல் சாலை பணிகள் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதியே பணிகள் முடிவுற்றதாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. மேலும் முழுமையாக சாலைகள் அமைக்கப்படாத காரணத்தினால் அப்போதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது கிராமத்திற்கு செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் முழுமையாக போடாத சாலைக்கு பணிகள் முடிந்து விட்டதாக கூறி விளம்பர பலகை வைத்து, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் ரூ.4.63 கோடி முறைகேடு செய்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான பாஜகவினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஆத்திராஜ் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சரவணா கிருஷ்ணர் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டையபுரம் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.