விளாத்திகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதையால் தேசிய நெடுஞ்சாலையில் நேர்ந்த விபத்து : 11 பேர் படுகாயம் - ஒருவர் பலி : போலீசார் விசாரணை!
மதுரை போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த TN 58 N 2643 என்ற வாகனப் பதிவெண் கொண்ட அரசு பேருந்து இன்று மதுரையிலிருந்து - திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தை மதுரையைச் சேர்ந்த சக்திவேல்(42) என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த அரசு பேருந்தானது மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் விளாத்திகுளம் அருகே தாப்பாத்தி அருகில் வந்துகொண்டிருந்தபோது, இப்பேருந்துக்கு முன்னால் சென்று கொண்டிருந்த (கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் இருந்து தூத்துக்குடிக்கு) காயல் ஒயர்கள் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியை அதிவேகத்தில் முந்திச் செல்ல முயன்ற போது லாரியில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து ஓட்டுநர் சக்திவேல் அஜாக்கிரதையாக கன்டெய்னர் லாரியை முந்திச் செல்ல முயன்ற காரணத்தினால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முற்றிலுமாக பெயர்ந்து பேருந்தில் பயணித்த 11 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்களை வரவழைத்து படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக எட்டையபுரம் மற்றும் அருப்புக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமாக கூறப்படும் அரசு பேருந்து ஓட்டுநர் சக்திவேலிடம் விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.