விளாத்திகுளம் அருகே ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் மர்ம மரணம்: போலீசார் விசாரணை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தை சேர்ந்த வள்ளியப்பன் என்பவரின் மகன் பரமசிவன் (28), இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் முரளி (26), மற்றும் நாகராஜ் என்பவரின் மகன் ஜெயராம் (25) ஆகியோருடன் மதுரை சாலையில் உள்ள மதுபான கடையில் மது அருந்திவிட்டு, மூன்று பேரும் ஆற்றங்கரை- வைப்பாற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது, அப்போது பரமசிவன் குளிக்கும் போது நீரில் மூழ்கியதாகவும், உடனே உடன் குளிக்க சென்ற முரளி மற்றும் ஜெயராம் ஆகிய இருவரும் மயங்கிய நிலையில் இருந்த பரமசிவத்தை இருசக்கர வாகனத்தில் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். பரமசிவத்தை பரிசோதித்த மருத்துவர் பரமசிவம் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து பரமசிவத்தின் உடலை கைப்பற்றிய விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் பிரேதாய்வுக்காக உடற்கூறாய்வு அறையில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பரமசிவத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரமசிவத்தின் பெற்றோர் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் பிரேத ஆய்வு முடிந்த பின்பு தான் பரமசிவத்தின் மரணம் குறித்து முழுமையாக காரணம் கூறப்படும் என்று தெரிவித்துள்ளனர்.