விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் மகன் பிரதீப்குமார் (32) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு உறவினர் ஒருவர் காலமான நிலையில், துக்கம் விசாரிக்க சென்னையில் இருந்து எட்டயபுரத்திற்கு வந்திருந்த உறவினர்களை அழைத்து வருவதற்காக தனது காரில் விளாத்திகுளத்திலிருந்து புறப்பட்டார்.
எட்டயபுரம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, தலைக்காட்டுபுரம் விளக்கு அருகே எதிரே காற்றாலை இறக்கைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி திரும்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக லாரிமீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த பள்ளத்தில் இரண்டு முறை உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் பிரதீப் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.