எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீவிபத்து - ஒருவர் சடலமாக மீட்பு - அருகில் இருந்த கோழிப்பண்ணையும் எரிந்து நாசம்!



பட்டாசு ஆலை மற்றும் கோழி பண்ணையில் இருந்த வாகனங்கள் சேதம்;அருகில் புதிதாக கட்டப்பட்ட வரும் பட்டாசு ஆலை கட்டிடங்களும் சேதம்,சாரல் மழையினால் மீட்பு பணியில் தொய்வு...






தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம்  அருகே கருப்பூர்  கிராமத்தில் கண்ணபிரான் என்பவருக்கு சொந்தமான ஜாஸ்மின் என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது இங்கு. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். உயர்தர பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் சேதம் அடைந்து தரைமட்டமானது. 

பட்டாசு ஆலையில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். பட்டாசு ஆலையின் அருகே இயங்கி வந்த கோழிப்பண்ணை முற்றிலும் தீயில் கருகி சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக சிவகாசி விருஷநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி (57) என்பவர் ஓடி வந்த போது இரும்பு கம்பி வேலிகளில் சிக்கி உடல் கருகி உயிரிழந்து கிடந்தார். கந்தசாமி பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணபிரான் உறவினர் என்று கூறப்படுகிறது.

கந்தசாமி சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் கோவில்பட்டி விளாத்திகுளம் சாத்தூர் தீயணைப்பு நிலைய வாகனங்களும் வீரர்களும் வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதில் 4க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. ஒரு கார் , 2 ஜீப் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. மேலும் அருகில் இருந்த புதியதாக கட்டப்பட்டு வரும் பட்டாசு ஆலை கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், எட்டயபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் லேசான மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.