புதூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.மா.கா சார்பில் பேரூராட்சியில் மனு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் சென்று பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ செய்யாமல் பேருந்து நிலையத்திற்கு வெளியிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கிவிடுகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகள் ஏற்படுவதற்கான அசாதாரண சூழ்நிலையும் தொடர்கின்றன. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இணைச் செயலாளரும், வெம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான திருப்பதி தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் புதூரா பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்று பயணிகளை ஏற்றவும் இறக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்தனர். அதுமட்டுமின்றி பயணிகளின் நலனுக்காக தற்காலிக நிழற்குடையும் பேருந்து நிலையத்திற்குள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.