விளாத்திகுளம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்ற முப்பெரும் விழா!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, மகளிர் தின விழா மற்றும் பள்ளி விளையாட்டு விழா என முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு வருகை தந்த விளாத்திகுளம் எம்எல்ஏ-விடம் கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் விரைவில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்து சென்றார். இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று பள்ளிக்கு 100% வருகை புரிந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் தனது சொந்த பணத்திலிருந்து ரூ.5000 அஞ்சலக சேமிப்பு வைப்பு நிதியாக வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார். மேலும், இப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், பள்ளி மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும், பாரம்பரிய கலைகளை போற்றும் விதமாகவும் சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்களை சினிமா பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி அசத்தினர். அதுமட்டுமின்றி, கவிதைகள் பாடியும், நன்னெறி நாடகங்கள் நடித்தும் மாணவர்கள் தங்களது கலைத்திறமையை அழகுற வெளிப்படுத்தினர். முப்பெரும் விழாவை முன்னிட்டு இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிச்சாமி தலைமையில் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.