விளாத்திகுளம் அருகே தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து சாலையோரத்தில் இறங்கி விபத்து : 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு காயம்!

தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்களைக் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து பேரிலோவன்பட்டி, சிந்தலக்கரை வழியாக கோவில்பட்டிக்கு செல்லும் 78A என்ற அரசு பேருந்தை இன்று தற்காலிக ஓட்டுநர் சுப்பிரமணியன் என்பவர் ஓட்டுச் சென்றுள்ளார். குறிப்பாக இந்தப் பேருந்தை பயன்படுத்தியே பேரிலோவன்பட்டி  பள்ளி மாணவர்கணள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இப்பேருந்து சிங்கிலிபட்டி கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென சாலையில் இருந்து இறங்கி சேற்றில் சிக்கிய நிலையில் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிரிழப்புகளும் இன்றி லேசான காயங்களுடன் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். பின்னர் காயமடைந்த மாணவர்களுக்கு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பேருந்து விபத்து பற்றி தகவல் அறிந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தற்போது தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். 

மேலும், சாலை ஓரத்தில் இறங்கி சேற்றில் சிக்கி விபத்துக்குள்ளான இந்த பேருந்தை ஜேசிபி வாகனம் மூலம் மீட்டு  விளாத்திகுளம் பணிமனைக்கு கொண்டுவரப்பட்டு தற்போது மாற்று டிரைவர் மூலம் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிகப்படியான பள்ளி மாணவர்கள் பயணிக்கும் இப்பேருந்தை அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் கொண்டு இயக்காமல், வேலைநிறுத்தம் காரணமாக தற்காலிக ஓட்டுநரை வைத்து இயக்கப்பட்டதுதான் இந்த விபத்திற்கு காரணம் என பெற்றோர்களால் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது...