விளாத்திகுளம் அருகே கடனுக்கு சிகரெட் தர மறுத்த பெட்டி கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு : தலைமறைவான போதை ஆசாமியை காட்டில் தேடிப் பிடித்த போலீசார்...!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை கிராமத்தில் மாரிச்சாமி என்பவர் பெட்டிக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை அதே கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர்(52) என்பவர் இவரது பெட்டிக்கடைக்கு வந்து பணம் தற்போது இல்லை அப்புறம் தருகிறேன் என்று சிகரெட்டை கடனுக்கு கேட்டுள்ளார். ஆனால் பெட்டி கடைக்காரர் மாரிச்சாமி பணம் கொடுத்தால் மட்டும்தான் சிகரெட் தருவேன் என்று கூறியுள்ளார். உடனே மது போதையில் இருந்த ஜெய்சங்கர், "நான் யார்னு தெரியுமா? நான் பெரிய ரவுடி.. ஒழுங்கு மரியாதையா சிகரெட் கொடு" என்று மிரட்டியுள்ளார். அப்போதும் மாரிச்சாமி சிகரெட் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜெய்சங்கர் தனது வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து அரிவாளை காட்டி வெட்டிவிடுவேன் என்று மிரட்டி மறுபடியும் சிகரெட்டை கொடு என கேட்டும் மாரிச்சாமி, "தர முடியாது... பணம் தந்தால் மட்டுமே தருவேன்" என்று சொன்னவுடன் போதையில் இருந்த ஜெய்சங்கர் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து மாரிச்சாமியின் கழுத்தில் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மாசார்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு, காயமடைந்த மாரிச்சாமியை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய போதை ஆசாமி ஜெய்சங்கரை மாசார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் முகேஷ் அரவிந்த் தலைமையிலான போலீசார் அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட போதை ஆசாமி ஜெய்சங்கர் குடிபோதையில் இது போன்று அப்பகுதி மக்களிடம் அடிக்கடி ரகளை செய்வதும், தனக்கு பணம் கடன் தரவில்லை என்றாலும் அவர்களை தாக்கி சண்டை போடுவதுமாக தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது..