விளாத்திகுளம் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 3 வயது சிறுவன் பலி - சோகத்தில் மூழ்கிய கிராமம்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம்.துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நிதின் கிருஷ்ணன் என்ற 3 வயது சிறுவன் நேற்றைய தினம் (20.11.2025) தனது தாய் மாரீஸ்வரி 100 நாள் வேலைக்குச் சென்ற போது உடன் சென்றுள்ளார். அப்பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியில் மரக்கன்றுகள் நடுவதற்காக டிராக்டரில் மரக்கன்றுகளை பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (23) எடுத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். அந்த டிராக்டரில் தனது மூன்று வயது குழந்தையான நிதின் கிருஷ்ணனை அமர வைத்துவிட்டு மாரீஸ்வரி தனது வேலையை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, டிராக்டர் டிரைவர் செல்வம் டிராக்டரை இயக்கிய போது டிராக்டரில் இருந்த 3 வயது சிறுவன் நிதின் கிருஷ்ணன் தவறி கீழே விழுந்ததில் டிராக்டரின் டயர் குழந்தை மீது ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு அப்பகுதியினர் உடனடியாக புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச்சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நிதின் கிருஷ்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் காடல்குடி காவல் நிலைய போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..