விளாத்திகுளத்தில் காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் 5-ஆம் நாள் திருவிழா : வாழைமரம், தோரணம் & வண்ண விளக்குகளுடன் ஜொலித்த காவல் நிலையம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல்துறையினர் சார்பில், விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் 5-ஆம் நாள் திருவிழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது. காவல் துறையினர் சார்பில் இன்று 5-ஆம் நாள் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளாத்திகுளம் காவல் நிலையத்தின் வாயிலில் வாழைமரங்கள் கட்டப்பட்டு, ஒளிர் வண்ண விளக்குகள் ஒளிர விடப்பட்டு காவல் நிலையமே திருவிழா கோலத்தில் ஜொலித்து காட்சியளித்தது. மேலும் திருக்கோவிலில் விளாத்திகுளம் காவல் டி.எஸ்.பி உட்பட காவல் அதிகாரிகள் பரிவட்டம் கட்டிக்கொண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமிகளின் சப்பரத்தினை இழுத்து நகர்வலம் வந்தனர். இதில் விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறையினர் தமது குடும்பங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவானது கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் மூலம் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டுவருகின்றன. அந்த வகையில் 5-ம் திருவிழாவான இன்று விளாத்திகுளம் காவல் துறையினர் சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது. காவல் துறையினர் சார்பில் இன்று திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விளாத்திகுளத்தில் காவல் நிலையம் நன்கு அலங்கரிக்கப்பட்டு வாயிலில் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு, ஒளிர் வண்ண விளக்குகளால் ஜொலிக்க விடப்பட்டு காவல் நிலையமே திருவிழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்திலிருந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒருங்கிணைந்து சென்று விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் இன்று காவல்துறை சார்பில் நடைபெற்ற 5-ஆம் நாள் திருவிழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. பின்னர் மயில் மற்றும் யானை வாகனங்களில் சுவாமி எழுந்தருளிய சப்பரத்தை காவல் துறையினர் வடம் பிடித்து இழுத்து நகர்வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் காவல்துறையினரே பொதுமக்களுடன் இணைந்து விழா எடுத்து நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.