தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சேர்வைக்காரன் மடம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டி(60), இவர் வாழை கமிஷன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வினோ(58)., தம்பதி இருவரும் சென்னையில் உள்ள தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திங்கள் கிழமை திசையன்விளையிலிருந்து சென்னைக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில்  கிளம்பி உள்ளனர். 60 பயணிகளுடன் 22-01-2024  திங்கள் கிழமை மாலை திசையன்விளையில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்றுள்ளது. 22-01-2024 திங்கள் கிழமை   இரவு 9 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையோர உணவகத்தில் சாப்பிடுவதற்காக ஆம்னி பேருந்தை பேருந்து ஓட்டுநர்   நிறுத்தி உள்ளார்.அப்போது அந்த ஆம்னி பேருந்தில்  இருந்து பயணிகள் சிலர் இறங்கி உணவகத்துக்கு சென்றுள்ளனர்.  ராஜபாண்டியும் அவரது மனைவி வினோவும் ஆம்னி பேருந்தில்  இருந்து இறங்கி உணவகத்துக்கு சென்று விட்டு  மீண்டும் ஆம்னி பேருந்துக்கு  வந்து தங்களது உடைமைகளை சரி பார்த்த போது  ஒரு டிராவல் பேக் மட்டும் இடம் மாறி வேறு கோணத்தில் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்துடன் அதை திறந்து பார்த்த போது அதிலிருந்த  துணிமணிகள் மடிப்பு கலைந்தும்....டிராவல் பேக்கின் உள்ளே துணிகளுக்கு அடியில் வைத்திருந்த ஒரு சிறிய ஹேண்ட் பேக்  காணாமல் போய் இருப்பதும் தெரியவந்தது. அந்த சிறிய ஹேண்ட் பேக்கில் தான் 37 பவுன் தங்க நகைகளும் 25 ஆயிரம் பணமும் இருந்ததாக கூறப்படுகிறது. உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு அந்த நகைகளை ஹேண்ட் பேக்கில் வைத்து எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து 37 பவுன் தங்க நகைகளும், 25 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்ட  தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து எட்டயபுரம் காவல் ஆய்வாளர்  ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உணவகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ஆம்னி பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆம்னி பேருந்தின் உள்பகுதியில் இளைஞர் ஒருவரின் நடவடிக்கைகள், சந்தேகப்படும்படியாக இருப்பதை உறுதி செய்த எட்டயபுரம் போலீசார் அந்த நபரின் போட்டோவை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று இரவிலிருந்து இன்று மாலை வரை  எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் இந்த தகவலை வெளியே கசிய விடாமல் இருப்பது மட்டுமின்றி தொலைந்து போன நகைகள் எண்ணிக்கை குறித்து  முன்னுக்கு பின்னான தகவலை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.