விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது: போராட்டத்திற்கு நடுவே கரூர் பொதுக்கூட்டத்தில் உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் கயத்தார் எட்டையாபுரம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதம் செய்த அதிக கனமழையினால் மிளகாய்,உள்ளி, கொத்தமல்லி, சூரியகாந்தி,கம்பு, சோளம்,உளுந்து, மாசி போன்ற அனைத்து பயிர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வேண்டியும், 2024 - 2025 நிதி ஆண்டிற்கான கனமழையினால் சேதம் அடைந்த அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கு உடனடியாக விடுவிக்க கோரி புதூர் விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாத நிலையில் இன்று புதூர் பேருந்து நிலையம் புதூர் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு முன்பாக கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக மாநாட்டில் உயிரிழந்த 41 பேருக்கு புதூர் பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாயிகள் சார்பாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனை அடுத்து விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார், பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததை தொடர்ந்து புதூர் பேருந்து நிலையம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து 5-ற்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனத்தில் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தற்போது அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் புதூர் பேருந்து நிலையம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.