விளாத்திகுளம் அருகே தொடர்ந்து செல்போன் டவர்களில் பேட்டரி திருட்டில் ஈடுபட்டு வந்த 2 பேரை கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிந்தலக்கரையில் கடந்த மாதம் 20ந்தேதி தனியார் செல்போன் டவரில் சில மர்ம நபர்கள் பேட்டரியை திருட முயற்சி செய்துள்ளனர். அந்த செல்போன் டவரின் அலாரம் அடித்தை தொடர்ந்து, பேட்டரி திருடும் முயற்சி கைவிட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. அப்போது அந்த கும்பல் வந்த வாகனத்தை அப்பகுதி பொதுமக்கள் அடையாளம் பார்த்து உள்ளனர். இதுகுறித்து அந்த தனியார் செல்போன் டவர் நிறுவனத்தினர் எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்கள் கொடுத்த வாகனத்தின் அடையாளத்தை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் செல்போன் டவரில் பேட்டரி திருட்டில் ஈடுபட முயன்ற விருதுநகர் மாவட்டம் உடையார் நாதபுரம் ஊரைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மகன் ரங்கசாமி (23), ராமநாதபுரம் மாவட்டம் சோடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்ன பாண்டி என்பவர் மகன் ராம்கி (25) , ஆகியோர் பேட்டரி திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர், சூரங்குடி, காடல்குடி, மாசார்பட்டி ஆகிய இடங்களில் உள்ள தனியார் செல்போன் டவர்களிலும் பேட்டரிகளை தொடர்ந்து திருடியது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.