விளாத்திகுளம் அருகே பள்ளிக்குச் செல்வதாக கூறிச் சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மாயம்:3 நாட்களுக்கு மேலாகியும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் பெற்றோர் வேதனை.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம்  அருகே உள்ள தெற்குமுத்தாலபுரம் என்ற கருப்பசாமி கோவில்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி, இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த தம்பதியின் மூத்த மகன் ஆனந்தராஜ் (15). பேரிலோவன்பட்டியில்  உள்ள அரசு உதவி பெறும் தி.வெ.அ. நல்லழகு  நாடார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியிலிருந்து ஊருக்கு வரும் வேன் மூலமாக பள்ளிக்கு சென்று படித்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை (04.01.2025) பள்ளிக்குச் சென்ற ஆனந்தராஜ் வீடு திரும்பவில்லை.‌ இதனை தொடர்ந்து அவரது பெற்றோர் பள்ளிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது வெள்ளி சனி என இரண்டு நாட்களும் ஆனந்த் ராஜ் பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து ஆனந்தராஜ் பெற்றோர் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர். 


சிறுவன் காணாமல் போய் மூன்று நாட்களுக்கு மேலாகியும் தற்போது வரை கிடைக்கவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் மன வேதனையில் உள்ளனர். 


வெள்ளிக்கிழமை வழக்கம் போல பள்ளிக்கு போயிட்டு மாலை சிறுவன் வீட்டுக்கு வந்ததாகவும், மறுநாள் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவன் வீடு திரும்பவில்லை என்றும், பள்ளியில் தொடர்பு கொண்டு கேட்டபோது மூன்று நாட்களுக்கு மேல் வரவில்லை என்றால்தான் பெற்றோரிடம் கேட்போம் என்று தெரிவித்ததாகவும், வரவில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்தனர். ஆனால் அப்படி எந்த ஒரு குறுஞ்செய்தியும் வரவில்லை. தன்னுடைய மகன் காணாமல் போய் மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், காவல்துறை தேடி வருவதாக கூறுகின்றனர். தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று மன வேதனையுடன் சிறுவனின் தாயார் முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.


சிறுவனை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.