எட்டயபுரம் அருகே டூரிஸ்ட் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3பேர் காயம்.




கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரு டூரிஸ்ட் வேனில் 22 பேர் நேற்று நள்ளிரவு கிளம்பி உள்ளனர். வேனை கோவை கிணத்துக்கடவு மதுக்கரை பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். டூரிஸ்ட் வேன் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ராசா பட்டி விலக்கு அருகே மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டு இழந்து சாலையின் இடது பக்கம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் வந்த மூன்று பேருக்கு பலத்த காயமும், மற்றவர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டையாபுரம் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூக்க கலக்கத்தில் இந்த விபத்து நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.