விளாத்திகுளம் பேரூராட்சியின் மெத்தனபோக்கு - சாலைகளில் தேங்கிய மழைநீர் - செயல்படாத பேரூராட்சி செயல் அலுவலரின் தூக்கம் கலையுமா?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகத்தினர் சார்பில், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததன் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்ட வேம்பார் ரோடு, கே.வி.கே.சாமிநகர், போலீஸ் லயன் தெரு, சாலையம் தெரு மற்றும் காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் செல்ல வழியின்றி கழிவுநீருடன் கலந்து சாலைகளிலேயே குளம் போல் தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விளாத்திகுளம் பேரூராட்சி ஊழியர்களின் அலட்சியப் போக்கினால் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், மழைநீர் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகும் மோசமான நிலையும், குடிநீர் குழாய்கள் கழிவுநீரில் மூழ்கும் மிகவும் சுகாதாரமற்ற சூழ்நிலையும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது.

இதுகுறித்து பலமுறை விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மக்கள் புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதால், மழைக்காலங்களில் விளாத்திகுளத்தில் பெரும்பாலான பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

ஆகையால், விளாத்திகுளம் பேரூராட்சியில் தொடரும் இதுபோன்ற அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து உடனடியாக கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பு செய்வதோடு மட்டுமின்றி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரவேல் பேரூராட்சி பணியாளர்களை பணி செய்வதை உரிய முறையில் கண்காணித்து பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் சுகாதாரமுடன் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது இப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.