என்ன செய்தார்கள் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் ?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட புதூர் ஊராட்சி ஒன்றியம் கந்தசாமிபுரம்,இந்த கிராமமானது இராமநாதபுரம் மாவட்ட எல்லை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது, இந்த கிராமத்திலிருந்து புதூர்,நாகலாபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பெருநாழி,சாயல்குடி, திருஉத்தரகோசமங்கை, தனுஷ்கோடி,தேவிபட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு கந்தசாமிபுரம் கிராமத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியம் T. வாலசுப்பிரமணியபுரம் கிராம வழியாகத்தான் காலம் காலமாக மக்கள் சென்று வருகின்றனர்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றதொகுதிக்குட்பட்ட கமுதி, பெருநாழி,சாயல்குடி,கடலாடி அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதூர்,நாகலாபுரம் மற்றும் எட்டையாபுரம் ஆட்டு சந்தைகளுக்கு செல்வதற்கும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கும் கந்தசாமிபுரம் to T.வாலசுப்பிரமணியபுரம் சாலை வழியாகத்தான் பயணித்து வருகின்றனர்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து சாலையின் இரு பக்கமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் இரண்டு மாவட்ட எல்லை பகுதி போக்குவரத்து மிகவும் கடுமையாக பாதித்துள்ளது. பெருநாழியில் இருந்து கந்தசாமிபுரம் சேர்வைக்காரன்பட்டி,சங்கரப்பநாயக்கன்பட்டி, பி.ஜெகவீரபுரம், புதுசின்னையாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பள்ளி பேருந்து தினமும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையை சீரமைக்க கோரி கந்தசாமிபுரம் மற்றும் T.பாலசுப்பிரமணியபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்றும். தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வனத்துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் அதேபோல் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக்குழு தலைவருமான மார்கண்டேயனிடமும் இரண்டு கிராம மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தபயனும் இல்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.