"HEADLIGHT" இன்றி இருளில் ஊர்ந்து வந்த விளாத்திகுளம் அரசுப் பேருந்து : விபத்து அச்சத்துடன் பயணித்த பயணிகள்!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாமல் தரமற்ற நிலையில் இயக்கப்படுவதும், அதனால் இப்பணிமணியைச் சேர்ந்த அரசு பேருந்துகள் அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக தொடர்ந்து கொண்டேதான் வருகிறது. இருப்பினும், தற்போது வரை திருநெல்வேலி மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் விளாத்திகுளம் போக்குவரத்துக் கழக பணிமனையில் உள்ள பேருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தாமலும், பணிமனை மேலாளர் மற்றும் பணியாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவாக... TN72 N 2100 என்ற வாகன பதிவெண் கொண்ட விளாத்திகுளம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சேர்ந்த பேருந்து  (29.10.2025) இரவு 8 மணி அளவில் கோவில்பட்டியிலிருந்து - விளாத்திகுளம் நோக்கி சுமார் 35க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்து புறப்பட்ட சிறிது தொலைவிலேயே முகப்பு விளக்குகள் (HEADLIGHT) பழுதாகி அணைந்துள்ளது. முகப்பு விளக்கு எரியாமல் போனவுடன் பேருந்து ஓட்டுநர் பாதுகாப்பாக சாலையோரம் பேருந்து நிறுத்தாமல் அலட்சியமாக தொடர்ந்து பேருந்தை ஓட்டி வந்துள்ளார். முகப்பு விளக்கு எரியாமல் இருளில் வெளிச்சமின்றி பேருந்து சென்றதால் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் விபத்து அச்சத்திலேயே பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பேருந்து கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலித்தும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுக்காமல் விபத்து ஏற்படும் வகையில் அலட்சியமாக பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதோடு, விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையைச் சேர்ந்த அனைத்து அரசு பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி இப்பகுதியில் அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 



அத்தோடு, HEADLIGHT எரியாமல் வந்த இப்பேருந்தின் பதிவெண் TN72 N 2100. ஆனால் இப்பேருந்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டில் வாகன பதிவு என்று TN74 N 2062 குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாகனப்பதிவெண் குளறுபடி போன்று விளாத்திகுளம் போக்குவரத்து கழக பணிமனையில் ஏராளமான குளறுபடிகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக விளாத்திகுளம் அரசு பேருந்துகள் மூலம் ஏற்படும் சில விபத்துகளுக்கு காவல்துறை மூலம் FIR கூட போட விடாமல்... பணிமனை மேலாளரே பல பஞ்சாயத்துகளை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது. 


கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே விளாத்திகுளத்தை சுற்றிலும் பல்வேறு அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாதது மற்றும் தற்காலிக ஓட்டுனர்கள் போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டபோதும் விளாத்திகுளம் டிப்போ மேலாளருக்கு.. சிறந்த டிப்போ மேலாளர் என்ற விருது வழங்கப்பட்டது தான் வேடிக்கையிலும் வேடிக்கை....!