விளாத்திகுளம் அருகே உள்ள துருப்பிடித்த பழைய இரும்பு கம்பிகளைக் கொண்டு தரமற்ற முறையில் நடைபெறும் சாலை பணிகள் : நடவடிக்கை எடுப்பாரா..? தூத்துக்குடி ஆட்சியர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு பாறைத் தெருப்பகுதியில் தற்போது ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்படும் ஃபேவர் பிளாக் சாலைகள் தரமற்ற முறையிலும், மிகவும் கால தாமதமாகவும் அமைக்கப்பட்டுவருதாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் சாலைகளுக்கு இடையே கால்வாயை மூடி சிமெண்ட் கான்கிரீட் மூலம் இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணிக்கு தரமான கம்பிகள் பயன்படுத்தப்படாமல், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு துருப்பிடித்த நிலையில் காணப்படும் தரமற்ற இரும்பு கம்பிகளை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்க பணிபுரியும் நபர்களிடம் பழைய கம்பிகளை பயன்படுத்தலாமா? என கேட்டதற்கு... இன்னும் கம்பிகள் வரவில்லை அதனால் தான்.. என்று அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளனர். 
எட்டையபுரத்தில் தரமற்ற பழைய இரும்பு கம்பிகளைக் கொண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர், செயல் அலுவலர் உட்பட சாலை அமைக்கும் பணிக்கான ஒப்பந்ததாரர் என அனைவரது மீதும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர் அப்பகுதி மக்கள்.