வாழவா...சாகவா? விளாத்திகுளம் அருகே கண்ணீருடன் புலம்பும் விவசாயிகள்!*



தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்துவரும் காட்டுப்பன்றிகள் & மான்கள் - கண்டுகொள்ளாத தமிழக அரசு!



தமிழகத்தின் தென்மாவட்டமான தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்கதையாகி வருகிறது. இதுபற்றி வேளாண்மை துறை, வனத்துறை அதிகாரிகள்‌ தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் தற்போது வரை காட்டுப்பன்றிகள், மான்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே வேதனையான உண்மை... இதனைக் கண்டித்து விளாத்திகுளம், எட்டையபுரம் மற்றும் புதூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்தும் அதிகாரிகள் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், எட்டையபுரம், புதூர், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர். இங்கு விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள நாவலக்கம்பட்டி, முத்துலாபுரம், தாப்பாத்தி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, வெம்பூர்,  கீழக்கரந்தை உள்ளிட்டபகுதிகளில் விவசாயிகள் 1 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டிருந்த நிலையில் தற்போது பல்லாயிரம் ஏக்கர் விவசாயப் பயிர்களை காட்டுப்பன்றிகள் மற்றும் மான்கள் முற்றிலும் நாசம் செய்து இப்பகுதி விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 



தமிழகத்தைப்போன்று இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற காட்டுப்பன்றிகள், மான்கள், யானைகள் தொல்லையால் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் அவதியற்று வந்தபோது, அந்த மாநில அரசுகள் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்றுவதற்காக உடனடியாக விலங்குகளை பிடிக்க பெரும் முயற்சி எடுத்திருக்கும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இப்பகுதி விவசாயிகளை மட்டும் பலமுறை முறையிட்டும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது... அதுமட்டுமின்றி, திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது சொந்த தொகுதியிலே இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் காட்டுப்பன்றிகள் மற்றும் மான்களால் அவதியிற்று வருவதை பத்திரிக்கை, ஊடகங்கள் மூலம் விவசாயிகள் படும் வேதனையை வெளிக்கொண்டு வந்தும் தற்போது வரை இந்த விவகாரத்தில் சிறு துளி கூட அக்கறை காட்டவில்லை என்பதை நிதர்சனமான உண்மை.