தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்கள் சேர்க்கை, பள்ளி கட்டடங்கள், ஜன்னல், கதவுகள் சீரமைத்தல், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனைக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், இன்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. முன்னதாக, பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு விபத்து காலங்களில் எப்படி செயல்படுவது என்பதை கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செயல்முறையாக செய்து காட்டினர்.
குறிப்பாக, தீ விபத்து ஏற்படும்போது, பதட்டமடையக்கூடாது, உடனடியாக வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை எடுத்து தீயை அணைத்துவிட வேண்டுமென்றும், வாகனங்களில் விஷப் பாம்புகள் அதிகமாக வருகின்றன. அதை அவ்வப்போது டிரைவர்கள் கண்காணித்துக் கொள்ளவேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது. அதேபோன்று
விபத்தில் காயம் ஏற்பட்டவர்களை அவர்களின் எடையைக் கொண்டு, இரு கரம், 3 கரம், 4 கரம் ஆகியவற்றால் எப்படி பிடித்து துாக்கிச் செல்வது என்பதை செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் இயங்கி வரும் 288 பள்ளி வாகனங்களில், 216 வாகனங்கள் ஆய்வுக்கு வந்திருந்தன.
அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியப்பாண்டியன், போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில், படிக்கட்டுகள், எமர்ஜென்ஸி கதவு, சீட், கேமிராக்கள், சென்சார் உள்ளிட்டடைகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில், 202 வாகனங்கள் ஆய்வில் தேர்வு பெற்றன. 14 பள்ளி வாகனங்களில் சீட், படிக்கட்டு, சென்சார், கேமிரா உள்ளிட்டவைகள் சரியாக இயங்காததால் அதை சரி செய்துவிட்டு வந்து வாகனங்களை மீண்டும் ஆய்விற்கு உட்படுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த ஆய்வில் கோவில்பட்டி தாசில்தார் சரவண பெருமாள், போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பலர் கலந்து கொண்டனர்.