மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு தொல்லை கொடுப்பதால் தங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை - இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  உள்ளவர்கள் மீது குளத்துவாய்பட்டி, குமாரகிரி கிராம மக்கள் குற்றச்சாட்டு!




அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்களில் துணியை கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் - எட்டையபுரம் அருகே பரபரப்பு

தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிப்பு.. 




தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, குளத்துவாய்பட்டி கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் . 35 ஆண்டுகளுக்கும் மேலாக 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அவர்களுக்கு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்தது.

வெளி மாவட்டங்களில் உள்ள முகாமை சேர்ந்த பலர் பதிவு செய்யாமல் இங்கு தங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஆடு மேய்க்க சென்ற குமரகிரி கிராமத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன்(56) என்பவரை முகாமை சேர்ந்த சிலர்  தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தொழிலாளி எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதன் பேரில் முகாமினைச் சேர்ந்த சந்திரமோகன்,நேதாஜி,கார்த்திக் பிரவீன் ராஜா, சிலம்பரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர் 



இதற்கிடையில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியிடம் அளித்தனர்.



இந்நிலையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்களால் குளத்துவாய்பட்டி, குமாரகிரி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் , பெண்கள், கால்நடை வளர்ப்பவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், முகாமை சேர்ந்த சிலர்  மது குடித்து விட்டும், கஞ்சா அடித்து விட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் இரு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அச்சுறுத்தலாக இருப்பதாகவும், 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள குடும்பங்களுக்கு முழு ஒத்துழைப்பு இரு கிராம மக்கள் கொடுத்து வரும் நிலையில், தங்களைப் பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாகவும், எனவே இரு கிராம மக்களுக்கும் பாதுகாப்பு வேண்டும், அவதூறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இரு கிராம மக்களிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் முகாமில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி குளத்துவாய்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் முன்பு குளத்துவாய்பட்டி, குமாரகிரி கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண்களில் கருப்பு துணி கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து தகவல் கிடைத்ததும் விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன்,, எட்டையபுரம் தாசில்தார் சுபா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,, முதல் கட்டமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இப்பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். 



மது மற்றும் கஞ்சா அருந்திவிட்டு தொல்லை கொடுப்பதால் தங்களால் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு போக முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது. குறிப்பாக பெண்கள் அந்தப் பகுதி வழியாக செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.




தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் குளத்துவாய்பட்டி, குமாரகிரி கிராமங்கள் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.