விளாத்திகுளம் அருகே கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 125 கிலோ கஞ்சா பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து பீடி இலை, பூச்சி கொல்லி மருந்துகள், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு 29-07-2025 ரகசிய தகவல் கிடைத்தது.
அவர்கள் திடீரென அங்கு சோதனை நடத்தி ஒரு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நாஞ்சில்ராஜ் என்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா பொட்டலங்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் முழு விசாரணைக்கு பிறகே கடத்தல் குறித்த விபரம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.