நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் பெட்டியில் திடீரென பற்றி எரிந்த தீ - துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்த கோவில்பட்டி தீயணைப்பு துறையினர்!


தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து  59 பெட்டிகளில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் புகளூர் காகித தொழிற்சாலை நோக்கி சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது. கடம்பூர் - கோவில்பட்டி இடையே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது சரக்கு ரயில் பெட்டியில் இருந்து நிலக்கரி தீப்பற்றி எரிந்து  சிதறி கீழே விழுந்துள்ளது. கடம்பூர் ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலில் இருந்த கார்டுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கோவில்பட்டி ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் உடனே நிறுத்தப்பட்டு பார்த்ததில் 17வது பெட்டியில் இருந்து நிலக்கரியில் தீப்பிடித்து இருப்பது தெரிய வந்தது. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவில்பட்டி மற்றும் கழுகுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள்  வரவழைக்கப்பட்டன.  ரயில்வே டிராக்கில் உயர் அழுத்த மின் பாதையில் சென்ற மின்சாரத்தை  நிறுத்தினர். அதைத் தொடர்ந்து சரக்கு ரயில் பெட்டியில் ஏறி தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இதன் காரணமாக கோவில்பட்டி வழியாக இரு மார்க்கங்களிலும் கடந்து செல்லும்  ரயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. பின்னர் கோவில்பட்டி ரெயில்வே நிலையம் முதல் நடைமேடை மற்றும் மூன்றாவது நடைமேடை வழியாக ரயில்கள் இயக்க பட்டன.